பள்ளிகரணை சுற்றுவட்டாரப்பகுதியில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 50 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பரசுராம் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிர் உசேன். இவர் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு கடலூர் சென்ற அவர், இரு தினங்களுக்கு பிறகு வீடு திரும்புயுள்ளார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் தொடர் கொள்ளை, வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சுரேஷ் (21), சீனிவாசன் (24) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள பப்லுவை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 50 சவரன் தங்க நகை, லேப்டாப், ஒரு கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.