தமிழ்நாடு

300 மீட்டர் தூரம் வெடித்து சிதறிய இரண்டாம் உலகப் போரின் குண்டு : நாகையில் பரபரப்பு

webteam

நாகை மாவட்டத்தில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2ஆம் உலகப் போரின் குண்டு ஒன்று காவல்துறையினரால் பாதுகாப்பாக வெடிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் கடந்த 15ஆம் தேதி மீனவர்கள் வலையில், ஒருமீட்டர் உயரமும், 11 இன்ச் சுற்றளவும் கொண்ட ராக்கெட் லாஞ்சர் வடிவிலான சிகப்பு நிற சிலிண்டர் வடிவ பொருள் சிக்கியது. இதுகுறித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சீர்காழி போலீசார் மற்றும் கடலோர காவல்படை கியூ பிரிவு போலீசார் அந்த பொருளை கைப்பற்றினர். பின்னர் பாதுகாப்பான இடத்தில் அதை மண்ணில் புதைத்து வைத்தனர்.

இந்நிலையில், இன்று திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் அதனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்தப் பொருள் நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமானத்திலிருந்து, கப்பல் உள்ளிட்ட எதிரிகள் இலக்கை தாக்க பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர் வகை வெடிகுண்டு என்பது தெரியவந்தது. வாயு மற்றும் வெடிமருந்துடன் கலந்து வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்ததும் அறியப்பட்டது.

இவ்வகை குண்டுகள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டவை என்றும், துருப்பிடித்திருந்த காரணத்தால், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது தெரியவில்லை என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குண்டை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை திருமுல்லைவாசல் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கடற்கரை மண்ணுக்கு அடியில் பாதுகாப்பாக வைத்து, மின்சார பேட்டரிகள் இணைப்புடன் குண்டு வெடிக்கச்செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. செந்நிற புகையுடன் பலத்த சப்தத்துடன் 300 மீட்டர் அளவிற்கு ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்துச்சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.