தமிழ்நாடு

ஆட்சியரிடம் மனு கொடுத்த 2ஆம் வகுப்பு குழந்தைகள்

webteam

தேனியில் 2 முதல் 4ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிகழ்வு நடந்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரை பார்க்க 40க்கும் அதிகமான சிறு வயது மாணவ, மாணவியர் இன்று வந்திருந்தனர். வனத்துறை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மஞ்சனூத்து கிராமத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியைச் சேர்ந்த அந்தக் குழந்தைகள், தங்களுக்கு ஆசிரியர் வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அத்துடன், மழலை மாறாமல் இருந்த அந்தக் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பதை மறந்து தங்களின் வகுப்பு பாடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பாடலாக படித்துக் காண்பித்தனர். இதைக்கண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து கூறும் குழந்தைகளின் பெற்றோர்கள், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் சூழலால் கல்வி கற்பதில் சிக்கல் நிலவுவதாக வேதனை தெரிவித்தனர்.