ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பானை ஜனவரி 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருவாரூரில் உடனடியாக இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருவாருர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.