பூந்தமல்லி நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே கேரளா சென்ற லாரியைச் சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து 270 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே ரப்பர் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரப்பர் சரக்குகளுக்கிடையே 270 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு அந்த லாரி சென்றதும், வழியில் ஆந்திராவில் சட்டவிரோதமாக கஞ்சா ஏற்றப்பட்டு கேரளாவுக்குக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் லாரியில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ரப்பர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா கடத்தல் தொடர்பாக 325 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா பதுக்கி வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ தமிழக போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அது தொடர்பான ரகசியம் காக்கப்படும் என்றும் தமிழக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.