காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 13 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வாலாஜாபாத் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 86 டாஸ்மாக் கடைகளில் 11 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை, மதுராந்தகம், உத்தரமேரூர் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்ற பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மது வாங்க வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள், ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.