தமிழ்நாடு

திருமணமான 2 மாதத்தில் பெண் உயிரிழப்பு: மறைக்க முயன்ற பெற்றோர்? காரணம் என்ன?

webteam

உத்திரமேரூரில் திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர் சிபிஐஎம் மாதர் சங்கத் தலைவியாக உள்ளார். இவர்களுக்கு 23 வயதில் செந்தாரை என்ற மகள் உண்டு. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு செந்தாரைக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் இன்று உத்திரமேரூரில் உள்ள தனது தாய் வீட்டில் செந்தாரை பாத்ரூம் செல்லும்போது வலுக்கி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோரால் கூறப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய ரகசியமாக ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செந்தாரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செந்தாரையின் உறவினர்கள் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருமணமான இரண்டே மாதத்தில் செந்தாரை இறந்துள்ளதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “திருமணத்திற்கு முன்பு செந்தாரை வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தன் மகளை சமாதானம் செய்த பெற்றோர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

இதனால் சில நாட்களாக செந்தாரை மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும் சுதந்திரமாக வெளியில் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனையின் முடிவில் மட்டுமே இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என உறுதியான தகவல் கிடைக்கும்” என தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணின் உடம்பில் எந்த ஒரு காயமும் கிடையாது. கழிவறையில் வலுக்கி விழுந்ததால் தான் உயிரிழந்தார் என பெற்றோர் தெரிவிக்கிறார்கள். உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறித்து உறுதியான தகவல் தெரிவிக்க முடியும்” என தெரிவித்தார்.