தமிழ்நாடு

தமிழகத்தில் 22,420 போலீஸ் பணியிடங்கள் காலி !

webteam

நாடு முழுவதும் ஐந்தரை லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி போலீஸ் காலிப் பணியிடங்கள் குறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 79 ஆயிரத்து 728. அதில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 396 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

மாநில அளவில் உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 952 போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130. அதில் 22 ஆயிரத்து‌ 420 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டிலேயே நாகாலாந்து மாநிலத்தில் மட்டும்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அதிகமாகவே போலீசார் உள்ளனர். அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள்‌ 21 ஆயிரத்து 292. ஆனால் அதை விட 941 போலீசார் கூடுதலாக பணியில் உள்ளனர். மெதுவாக நடைபெறும் ஆள் தேர்வு, பணி ஓய்வு மற்றும் எதிர்பாராத மரணங்களே இவ்வளவு காலியிடங்கள் இருப்பதற்கான காரணம் என கூறப்படுகிறது.