தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவரசமாக விசாரிக்க அனுமதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (9.6.2025) மறுத்துவிட்டது.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,291 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. ஆனால், தமிழகம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு வழங்கவேண்டிய நிதியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரி மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது ‘கட்டாயப் பங்கை’ நிறுத்தி வைத்துள்ளது. இதனால், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 செயல்படுத்தப்படுவதையும், தமிழ்நாட்டில் 43.94 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள், 2.21 லட்சம் ஆசிரியா்கள் மற்றும் 32,701 பள்ளி ஊழியா்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும் முடக்கியுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதைக் காட்டும் நோக்கம் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள், முற்றிலும் ஒரு தனித் திட்டமாக இருந்தாலும், சமக்ர சிக்ஷா திட்டத்துடன் அதன் இயல்பான தொடா்பாகும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
2024-25 நிதியாண்டிற்கான சமக்ர சிக்ஷா நிதியை, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தாமதத்தால் ஊதியம், ஆசிரியா் பயிற்சி, பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற மாணவா் உரிமைகள் மற்றும் அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்கட்டமைப்பு மானியங்களை சீா்குலைத்துள்ளது.
இத்தகைய நிா்பந்த உத்திகள் சட்டபூா்வமாக அனுமதிக்கப்படவில்லை அல்லது தமிழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழி ஃபாா்முலா காரணமாக மாநில சட்டத்திற்கு இணங்கவில்லை. ஆகவே, 1.5.2025 முதல் உத்தரவு நிறைவேற்றப்படும் தேதி வரை, அசல் தொகையான ரூ.2151.59 கோடியுடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் சோ்த்து ரூ.2291.30 கோடியை மத்திய அரசு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சமக்ர சிக்ஷா திட்ட நிதியை என்இபி -2020 மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் செயல்படுத்தலுடன் மத்திய அரசு நிபந்தனையுடன் இணைப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பிரஷாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமா்வு, 2004-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதியை நிறுத்திவைத்திருப்பதாக கூறி மே மாதமும், இந்த ஆண்டும்கூட தமிழக அரசு மனு தாக்கல் செய்திருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டது.
அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ’எந்த அவசரமும் இல்லை. பகுதி வேலை நாள்களுக்குப் (கோடைவிடுமுறையின் புதிய பெயா்) இந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தது.