தமிழ்நாடு

`பார்க்க பச்சரிசி போல இருக்கு; சுங்கக்கட்டணம் செலுத்துங்க’- தேங்கிய 2000 டன் இட்லி அரிசி

webteam

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில், அதிகாரிகளின் குழப்பத்தால் சுமார் ஆயிரம் டன் இட்லி அரிசி ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்திருப்பதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள திருச்சி, சேலம், மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திருத்தணி, விக்கிரவாண்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த குருவை நெல் ரகமான ஏ எஸ் டி :16 , ஆடுதுறை 36 , ஏடி :37 , ஆகிய ரக நெல்லின் அரிசிகள் இட்லி அரிசியாக விளங்குகிறது. இந்த வகையான இட்லி அரிசியை கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் தமிழர்கள் வாழும் அரபு நாடுகள் ஆகிய பகுதிகளில் பலரும் விரும்பி வாங்குவதுண்டு.

இதனால் அங்கெல்லாம் இது ஏற்றுமதி செய்யப்படும். அந்த வகையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அறுவடையான குறுவை நெல்களை கொள்முதல் செய்து இதனை இட்லி அரிசியாக அரிசி ஆலைகளில் அறவை செய்து அதை ஏற்றுமதி செய்ய முயன்றுள்ளனர்.

இதற்காக சுமார் 2000 டன் அரிசிகளை சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற விவசாயிகள் போது, அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் `இது புழுங்கல் அரிசி அல்ல; பச்சரிசி. எனவே சுங்க கட்டணமாக கூடுதல் 20 சதவிகிதம் தொகை செலுத்தினால்தான் இவற்றினை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்’ என கூறியுள்ளனர்.

இது இட்லி அரிசி தான் எனக்கூறி, ஆலை உரிமையாளர்கள் கூடுதல் தொகை செலுத்த மறுத்துள்ளனர். இதனால், கடந்த 20 நாட்களாக சுமார் 2000 டன் மதிப்புள்ள அரிசி துறைமுகங்களிலே தேக்கமடைந்துள்ளது. இந்த அரிசி தேக்கமடைந்துள்ளதால் இனி வரும் காலங்களில் நடைபெறும் குறுவை நெல் கொள்முதலும், அதனை அடுத்து இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய உள்ள சம்பா நெல் அறுவடை நெல்லையும் கொள்முதல் செய்வது அரசுக்கும் தனியார் நெல் வியாபாரிகளுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இது அரசுக்கும் தனியார் நெல் வியாபாரிக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்துவதால் நெல் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகயாகும் சூழ்நிலை ஏற்படும் என தமிழ்நாடு அரிசி உரிமையாளர் சங்க மாநில செயலாளர் சிவானந்தம் தெரிவித்தார்.