காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஜே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று, தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. 2000 பேர் மட்டுமே இந்நிகழ்சிக்கு அனுமதிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான QR Code உடனான அனுமதி சீட்டினை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுங்குவார்சத்திரம் குன்னம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொது மக்களுக்கு வழங்கினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதனால், தனது அரசியல் பரப்புரை பயணத்தை , தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் தான், கரூர் சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பின்பு தவெக தனது இயல்பான அரசியல் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தவெக-வின் பொதுக்குழு நடந்திருந்தது. அக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து, சேலத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு தவெக-வினர் சார்பில் அதற்கான அனுமதியை கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கியிருந்தனர். ஆனால், சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்திருக்கிறது.
இந்நிலையில் தான் இன்று, தவெக தலைவர் விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் மாவட்ட மக்களுடனான உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டர்களுக்கு தவெக வின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்விற்கு 2000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்ற நிலையில், இதற்கான QR Code உடனான அனுமதி சீட்டினை தவெக பொது செயலாளர் ஆனந்த் சுங்குவார்சத்திரம் குன்னம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் என்னப் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.