கள்ளக்குறிச்சி  முகநூல்
தமிழ்நாடு

இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்... தனியாக இருந்த வயதான தம்பதி; என்ன நடந்தது?

அதிகாலை நேரத்தில் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியயை கட்டி போட்டு விட்டு அவர்கள் கண்முன்னே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்...இந்த கொள்ளை சம்பவம் மொத்த கள்ளக்குறிச்சியையும் உலுக்கியுள்ளது..

விமல் ராஜ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ள தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.. இன்னும், நான்கு நாட்களில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருப்பதால் வங்கி லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகைகள் எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

இந்த நிலையில், கேசரிவர்மன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பாஸ்போர்ட் ரெனிவல் செய்வதற்காக நேற்று மாலை சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளார். வீட்டில், கேசரிவர்மனின் தாய் தந்தை மட்டுமே இருந்துள்ளனர்.. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் அதிர்ச்சி சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கையில் இரும்பு ராடுடன் திடீரென கேசரிவர்மன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கேசரிவர்மனின் தாய், தந்தை இருவரையும் தாக்கி தனி அறையில் வைத்து மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி தலையணை வைத்து முகத்தில் அழுத்தியுள்ளனர்.." சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்" என கூறி விட்டு பீரோவில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் பதறிப்போன, கேசரிவர்மனின் தந்தை நடந்த சம்பவத்தை மகனிடம் கூறியுள்ளார்.உடனடியாக கேசரிவர்மன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்..அதுமட்டுமின்றி, அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்த வயதான தம்பதியை மிரட்டி வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.