தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் புலிகளின் நடமாட்டத்தை துல்லியமாக படம் பிடிக்க 200 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட 925 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் புலிகள் கணக்கெடுப்பில், தேக்கடி பெரியார் புலிகள் காப்பத்தில் 2010ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 30 முதல் 36 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. 2014ம் ஆண்டு கணக்கெடுப்பில் அந்தப் புலிகளின் எண்ணிக்கை 26 ஆக குறைந்தது. இடையில் மூன்று புலிகள் இறந்தது கண்டறியப்பட்ட நிலையில் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளதால் புலிகள் இடம் பெயர்ந்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.
இந்நிலையில் இடம்பெயரும் புலிகளையும் கண்டறியும் நோக்கில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள வனங்களில் ஒரே நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது. பிப்ரவரி 9ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பிற்காக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் 59 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புலிகளின் எச்சம், கால்தடம், மரங்களில் புலிகளின் நகக்கீறல்கள், உதிர்ந்த முடி, வேட்டையாடுதலின் போது புலிகளுக்கு ஏற்பட்ட காயங்களால் வழிந்த ரத்தம், மாமிசம் ஆகியன சேகரிக்கப்பட்டன. அவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கணக்கெடுப்பின் மூன்றாம் நாளில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 200 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவாகும் புலியின் புகைப்படங்களில் காணப்படும் வரிகள் மூலம் ஒவ்வொரு புலியும் தனித்தனியே கணக்கில் சேர்க்கப்பட உள்ளது. இந்தத் தானியங்கி கேமராக்கள் ஒரு மாதம் வனத்திற்குள்ளேயே இருக்கும். புலிகள் கணக்கெடுப்போடு, புலிகளுக்கு இரையாகும் மான்கள், காட்டெருமைகள், காட்டுமாடுகள், ஆடுகள், கரடி உள்ளிட்ட மாமிசம் மற்றும் தாவர உண்ணிகளையும் சேர்த்து கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதுமான கணக்கெடுப்பில் கேரள வனங்கள் 250க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வயநாடு, மறையூர், மூணார், இரவிக்குளம் தேசிய பூங்கா உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடந்து வருகின்றன.கணக்கெடுப்பின் முடிவில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் மட்டுமின்றி, காப்பகத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள புலிகள், வேறு வனங்களில் உள்ள புலிகளைக் கண்டறிவதோடு, கேரளா மாநிலம் முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை அறிய முடியும் என்கின்றனர் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள். அதோடு புதிதாக புலிகள் கண்டறியப்படும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.