தமிழ்நாடு

சுற்றுலா கொண்டாடியதால் 20 மணிநேரம் அடைத்து சித்ரவதை: வனத்துறையினர் மீது புகார்

webteam

கொடைக்கானல் அருகே வனத்துறைக்கு சம்பந்தம் இல்லாத வருவாய் நிலத்தில் சுற்றுலா கொண்டாடிய மக்களை வனத்துறையினர் சிறைபிடித்து 20 மணிநேரம் பூட்டிய அறைக்குள் வைத்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. 

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் அருகே உள்ள வருவாய் நிலங்கள் அமைந்துள்ள மலைப்பகுதியில், கொடைக்கானலைச் சேர்ந்தவர்கள் 20க்கும் அதிகமானோர் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். சத்தமாக இசை ஒலிக்கச் செய்து, ஆடிப்பாடி கொண்டாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தற்காலிக சூழல் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் கைகலப்பில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களை பேரிஜம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று விடுதி ஒன்றில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகிறார்கள். 

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்போதும் வனத்துறை தலையிட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்து தீ மூட்டியதாக வழக்கு பதிந்து அபராதத் தொகையை விதித்து பின்னர் படுகாயங்களுடன் இருந்த அந்த ஆறு பேரையும் விடுவித்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அடித்து துன்புறுத்தப்பட்ட 3 பேர் ரத்த வாந்தி எடுத்தாக உறவினர்கள் கூறுகிறார்கள்.