சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1994-ஆம் ஆண்டு லெக்சஸ் சொகுசு காரை இறக்குமதி செய்ததில் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதிய கார்களை, பழைய கார்கள் என ஏமாற்றி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு இவ்வழக்கில் நடராஜன் உள்பட 4 பேருக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடராஜன் உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை, விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன், வி.என்.பாஸ்கரன், தொழிலதிபர் யோகேஷ் பாலகிருஷ்ணன், அபிராமபுரம் இந்தியன் வங்கி உதவி மேலாளர் சுஜரிதா ஆகிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.