தவெக கரூர் பரப்புரை எக்ஸ்
தமிழ்நாடு

41 பேர் பலி விவகாரம்| தவெக நிர்வாகிகள் சிறையில் அடைப்பு!

விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பரப்புரையை நிறுத்தாது ஏன் எனவும் வினவியுள்ளது.

PT WEB

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர்உயிரிழந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மதியழகன்மற்றும் மாசி பவுன்ராஜ் ஆகியோர், கரூர்மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தாங்கள் கேட்ட இடத்தில்காவல்துறை அனுமதி மறுத்ததோடு, குறுகிய இடமான வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தான் நெரிசல்ஏற்பட்டது என வாதிட்டனர். மேலும், 10ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் எனஎண்ணியதாகவும், இவ்வளவு கூட்டம்வருமென எதிர்பார்க்கவில்லை என்றும், காவல்துறை தரப்பில் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் வாதத்தை முன்வைத்தனர்.

கரூர் துயரச் சம்பவம்

அரசுத் தரப்பில், தவெகவினர் அனுமதிகேட்ட பகுதிகளில் சிலைகள், பெட்ரோல்நிலையம் உள்ளதால் அனுமதிவழங்கவில்லை என்றும், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஒப்புதலுடன், இடத்தைகாட்டியே பிறகே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்காததே கூட்ட நெரிசலுக்குகாரணம் என்றும், அனுமதிக்காத பாதையில் விஜய் வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை தவெகவினர் முறையாக பின்பற்றவில்லை எனவும் அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தவெக நிர்வாகிகள் 2 பேர் சிறையில் அடைப்பு..

இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பரத்குமார், விஜய் டாப் ஸ்டார்என்பதால், அவர் வந்தாலே அதுமாநாடுதான் என்றும், அப்படி இருக்கையில் எப்படி 10 ஆயிரம் பேர்மட்டும் வருவார்கள் என கணித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

விஜயின் பிரசார கூட்டத்துக்கு திடல் போன்றபகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என வினவிய நீதிபதி, கூட்டம் அளவுகடந்து சென்றது தெரிந்தும், நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் தவெக தரப்பிடம்அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

கரூர் தவெக பரப்புரை

மனசாட்சி படிதான்உத்தரவு பிறப்பிப்பேன் என தெரிவித்த நீதிபதி பரத்குமார், கைதான தவெக நிர்வாகிகள் இருவரையும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.