தமிழ்நாடு

காவலரிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது

காவலரிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது

webteam

சென்னை மயிலாப்பூரில் காவலரின் செல்போனை பறிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை, மயிலாப்பூர் ஆர்கே சாலையில் நேற்று நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட‌ காவலரிடமிருந்து, பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் செல்போனை காவலர் இறுக்கமாக பிடித்திருந்ததால் அதை பறிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த இருவரையும் காவலர்கள் துரத்தினர். இதில் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பாஷித் இப்ராஹிம் என்பவர் காவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். 

ஆனால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ‌கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி, ராயப்பேட்டை அருகே பிடிபட்டார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவ‌ரும் மயிலாப்பூர் பகுதியில் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் திருடிய செல்போன்கள் அனைத்தும் பர்மா பஜாரில் கடை வைத்துள்ள அப்துல் ரகுமானிடம் விற்பனை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

அப்துல் ரகுமான் அண்மையில் மாம்பலம் காவல்துறையினரால் திருட்டு போன் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். இதைத்தொடர்ந்து, ‌இவர்கள் சென்னையில் எங்கெல்லாம் செல்போன்கள் திருடியுள்ளார்கள் என்பது குறித்து மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்கே சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.