தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர் ஹரிஹரன் மீது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17வயது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி நேற்று முன்தினம் அங்குள்ள காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உறவினர்கள் வேடநத்தம், தூத்துக்குடி மற்றும் குறுக்கு சாலை பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறுக்கு சாலையில் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் உடலை பெற்றுக் கொள்வோம் என்று தொடர்ந்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் கலந்து கொண்ட உயிரிழந்த சிறுமியின் சகோதரி வித்யா திடீரென மயக்கம் அடைந்தார். இதையெடுத்து அவருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிசிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுமி கொலை செய்யப்பட்டு 24 மணி நேரம் கடக்கவிருக்கும் நிலையில் தற்போது வரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் வேடநத்தம் கிராம பொதுமக்கள் குளத்தூர் to குறுக்குசாலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று பொது மக்களை கைது செய்ய முயன்ற போது, மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர்களை பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஆய்வாளர் ஹரிஹரன் ஒழுங்கா போறீங்களா உங்கள் அனைவரையும் கைது செய்து உள்ளேவைத்து விடுவேன் என்று மிரட்டியதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவி காணாமல்போனது குறித்து பெற்றோர் புகாரளிக்க சென்ற போது முறையாக விசாரிக்கவில்லை என்றும், புகாரளிக்க சென்ற மாணவியின் பெற்றோரை அவதூறாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல் ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.