தமிழ்நாடு

ஊர் சுற்றிய இளைஞர்கள்: விசாரித்த போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த இருவர் கைது

webteam

சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் பேரூராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாரமங்கலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் செல்வம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை நிறுத்திய போலீசார் இருவரிடம் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வெளியே சுற்றியது தொடர்பாக விசாரித்துள்ளனர்.

இதையடுத்து அந்த இளைஞர்கள் இருவரும் எஸ்.ஐ செல்வத்தை ஆபாச வார்த்தைகளில் திட்டியதுடன், பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு போலீசாரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், தங்களை தடுத்து நிறுத்தினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து அங்கு பணியிலிருந்த மற்ற போலீசார் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒருவர் கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த தறித் தொழிலாளி பாபு, மற்றொருவர் தனியார் நிறுவன அலுவலக உதவியாளர் ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.