திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பதுங்கு குழியில் தங்கி திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கூப்பாச்சிக்கோட்டை என்ற ஊருக்கு வெளியே கரம்பை வங்கால் பகுதி உள்ளது. இது ஆள் நடமாட்டம் இல்லாத மூங்கில் புதர்பகுதி ஆகும். இங்கிருந்து புகை வெளியானதால் வயல்வெளியில் வேலைபார்த்த சிலர் அச்சமடைந்து அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பதுங்கு குழி அமைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் தங்கி இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோதனை செய்ததில், புதர் பகுதியில், 6 அடி ஆழம், 5 அடி நீளத்தில் பதுங்கு குழி அமைத்து, யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் அதன் மேல் மூங்கில்களை அடுக்கி வைத்து தார்பாய் போட்டு மண்ணால் மூடியவாறு வசிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பரவாக்கோட்டை தோப்பு தெருவைச் சேர்ந்த கண்ணதாசன், ஆனந்தி ஆகியோர் அங்கு தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
பகல் நேரத்தில் பதுங்கு குழியில் தங்கிக் கொள்வதும், இரவு நேரங்களில் வெளியே சென்று பம்பு செட்டுகள் போன்றவற்றை திருடியதும் தெரியவந்தது. அவர்களுக்கு உதவியாக தினேஷ்குமார் என்பவரும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதர் பகுதியில் பதுங்கு குழி அமைத்து பெண்ணுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.