தமிழ்நாடு

ஆம்பூர்: கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; 2 பேர் மரணம், 5 பேர் படுகாயம்

ஆம்பூர்: கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; 2 பேர் மரணம், 5 பேர் படுகாயம்

Sinekadhara

ஆம்பூர் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் மிதிவண்டிமீது மோதி டீக்கடைக்குள் நுழைந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுனர் இளங்கோவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இரு பக்கங்களிலும் தாறுமாறாக ஓடி, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மிதிவண்டி மோதி அருகாமையிலிருந்த டீக்கடைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மகேஷ்பாபு என்பவரின் 4 வயது மகன் மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த கணேஷ், கோகுல், தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் சாலை ஓரமாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் டீக்கடை உரிமையாளர் வேண்டா ஆகியோர் மீதும் அவ்வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 5 பேரையும் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டுனர் இளங்கோவை கைதுசெய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.