தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம் : 2 பேர் ‘பணி நீக்கம்’

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம் : 2 பேர் ‘பணி நீக்கம்’

webteam

மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் அனுமதியின்றி நுழைந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 பேரில், 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்குப்பதிவு குறித்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பெண் வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேர் அனுமதியின்றி நுழைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிசிடிவி கேமரா பதிவில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியானது. 

இதைத் தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலால்துறை வட்டாட்சியருமான சம்பூர்ணம், மாநகராட்சி ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியப்பிரகாஷ் ஆகிய 4 பேரையும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்து ஆணையிட்டார். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி இளநிலை உதவியாளர் ராஜபிரகாஷ், துப்புரவுப் பணியாளர் சூரியப்பிரகாஷ் ஆகியோரை பணிநீக்கம் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.