கிருஷ்ணகிரியில் நாகப்பாம்பை பிடித்து மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரை சேர்ந்தவர் குமரவேல். இன்று மாலை இவரது ஓட்டு வீட்டின் சமையலறையில் உஸ் உஸ் என சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அவரது மனைவி சென்று பார்த்தபோது சமையல் அடுப்பிற்கு கீழே நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்திருக்கிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அங்கு வந்த பெயின்டர் சுந்தர் மற்றும் அவரது நண்பர் சுபாஷ் ஆகிய இருவரும் பாம்பை சாதுர்யமாக பிடித்துள்ளனர். பின்னர் அருகே இருந்த தண்ணீர் கேனில் அடைத்து, அதை எடுத்துக்கொண்டு மத்தூர் காவல் நிலையம் வந்துள்ளனர்.
காவல் நிலையத்திற்குள் சென்று நாகப்பாம்பை ஒப்படைக்க முயற்சித்தனர். ஆரம்பத்தில் தண்ணீர் கேன் என அஜாக்கிரதையாக பேசிய போலீசார் நாகப்பாம்பு என தெரிந்ததும் இருக்கையில் இருந்து எழுந்து அலறி வெளியேறியுள்ளனர். பின்னர் பிடித்த பாம்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்கக்கூடாது என அறிவுரை கூறி, காட்டுப்பகுதியில் விட்டுவிடுமாறு தெரிவித்து அனுப்பினர். பாம்பை ஒப்படைக்க வந்த நபர்களால் மத்தூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.