தமிழ்நாடு

காட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..!

காட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..!

webteam

கோவையில் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினரால் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, சின்ன தடாகம், ஆனைக்கட்டி போன்ற பகுதிகள் வனத்துறையை ஒட்டியுள்ளது. இந்த பகுதிகளில் சமீப காலமாக மக்கள் குடியேற்றம், விவசாயம் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டடங்களும், வயல் வெளிகளும் காட்டு யானைகளுக்கு கடும் பிரச்னைகளாக இருந்து வருகிறது. மேலும், உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள், தங்களின் விளை நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாகவும், குறிப்பாக சின்னதம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளால் தங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுவதால் அந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், யானைகளை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் முதுமலையிலிருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.  இதனால், எப்போது வேண்டுமானாலும் அந்த இரண்டு யானைகளையும் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த யானைகளை வேறு இடத்துக்கு மாற்றினாலும், வனத்தை ஒட்டியப்பகுதி என்பதால் தொடர்ந்து யானைகள் வரும் எனக்கூறும் சூழல் ஆர்வலர்கள், மனிதர்களுக்குத்தான்  கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கின்றனர்.

இதற்கிடையே, சின்னதம்பி மற்றும் விநாயகன் ஆகிய காட்டு யானைகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்களின்  ஒரு பிரிவினர் #SaveChinnathambi #SaveVinayagan என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.