சென்னை மேற்கு மாம்பலம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: குடிசை மாற்று வாரியத்தின் மேற்கூரை மீண்டும் இடிந்த விபத்தில் இருவர் காயம்!

சென்னையில் மீண்டும் குடிசை மாற்று வாரியத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

PT WEB

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த மாதம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தலையில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

பட்டினம்பாக்கத்தில் உயிரிழந்த இளைஞர்

இந்நிலையில், அதேபகுதியில் மூன்றாவது மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், மோகன் என்பவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் சேதமடைந்த வீடுகளில் இருந்த எட்டு குடும்பத்தினரை வெளியேற்றினர். அவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதே போல, சென்னை மேற்கு மாம்பலத்தில் 52 ஆண்டுகள் பழமையான குடிசை மாற்று வாரியத்தின், வீடு ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடுபாடுகளுக்குள் ஒருவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பழமையான இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால், உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.