தமிழ்நாடு

காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழந்த 2 சிறுமிகள்.. சுத்தம் செய்யாத குடிநீர் தொட்டி காரணமா?

kaleelrahman

ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் காய்ச்சலால் 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் சுப்ரியா (8 ) காய்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா (6) காய்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடுத்தடுத்து சிலருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. காசிநாதபுரம் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (42), மற்றும் சந்துரு, ரோகித், லாவண்யா, சிவராஜேஷ், சிவசக்தி உள்ளிட்ட 14 பேருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

இதில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யபட்ட நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்ட மாரியம்மாள், சிவசக்தி. உள்ளிட்டோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மேலும் இந்த பகுதி மக்களுக்கு வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சரிவர சுத்தம் செய்யாமல் தண்ணீர் வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த காய்ச்சல் பரவலை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் காசிநாதபுரத்தில் பகுதியில் முகாமிட்டுள்ளனர் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.