மானாமதுரை சாலை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இரண்டு மாடுகள் உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிளங்காட்டுர் கிராமத்தில் வசிப்பவர் பழனிமுருகன். இவர் இரண்டு பசு மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கிளங்காட்டுர் பகுதியில் காற்றுடன் கூடிய மழையினால், சாலையின் அருகே இருந்த மின்கம்பம் முறிந்து மின்கம்பி விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் பழனிமுருகன் தனது வீட்டில் இருந்து இன்று இரண்டு மாடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது சாலையின் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
இதையடுத்து மின்சார வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. மாடுகளை பறிகொடுத்த பழனிமுருகன் சோகத்தில் மூழ்கியுள்ளார். இதுதொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள், கிளங்காட்டூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகவும், அறுந்து விழும் நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் மின்வாரியத்தினர் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.