சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தாய் மற்றும் 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் , 1 ஆண் குழந்தையும் உள்ளது.
அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிப்புரிந்துவருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆறு மாதமாக அசோக்குமார் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், ஆறுமாதத்திற்கு பிறகு நேற்று இரவுதான், கிருஷ்ணாபுரம் பகுதிக்கு அசோக்குமார் வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், அதிகாலை தவமணியும் அவரது குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தவமணியின் பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, தாய் உட்பட குழந்தைகள் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மேலும், தோட்டத்தில் அசோக்குமார் கதறி அழுது கொண்டிருந்துள்ளார். அவரது உடலில் வெட்டு காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது. என்னவென்று கேட்டபோது, தன்னையும் தனது குடும்பத்தையும் மர்மநபர் வெட்டி விட்டு தப்பித்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
இதில், 13 வயது வித்யதாரணி , 10 வயாது அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவமணி, அருள்குமாரி என்பவர்கள் மட்டும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
எனவே, சந்தேகத்தின் பேரில் கணவர் அசோக்குமாரிடத்தில் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையின் பின்னணியில் இருப்பது யார் ? என்று ஆத்தூர் டிஎஸ்பி சத்தீஸ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எஸ்.பி. கௌதம் கோயல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார். கொலை நடந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கைரேகை நிபுணர்களும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.