தமிழ்நாடு

‘ஃபேஸ்புக்-ல தான் செல்போன் திருட கத்துக்கிட்டோம்’ - கண்ணீருடன் பேசிய திருடர்கள்!

‘ஃபேஸ்புக்-ல தான் செல்போன் திருட கத்துக்கிட்டோம்’ - கண்ணீருடன் பேசிய திருடர்கள்!

webteam

சென்னையில் செல்போன் திருடி பிடிபட்ட இளைஞர்கள் இருவர், ஃபேஸ்புக் பார்த்து திருடக் கற்றுக்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதி கணக்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காமாட்சி, அதே பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கணவருடன் பேசிக்கொண்டே காலடிப்பேட்டை மார்க்கெட் வழியாக சென்றுள்ளார். அப்போது காமாட்சி தனிமையில் செல்வதைக் கண்ட செல்போன் திருடர்கள் இருவர், அவரிடம் செல்போனை பறிக்க திட்டமிட்டுமிள்ளனர். கழுகு போல காமாட்சியை கவனித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அந்த இரண்டு திருடர்களும், ஆள் யாரும் வராத நேரம் பார்த்து காமாட்சியின் கையில் இருந்த செல்போனை பிடிங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

கையில் இருந்து செல்போன் பறிபோனதும், கத்திக் கூச்சலிட்டுள்ளார் காமாட்சி. அது மார்கெட் பகுதி என்பதால், காமாட்சியின் சத்தம் கேட்டு உடனே மக்கள் திரண்டு விட்டனர். தப்பிச்செல்ல முயன்ற திருடர்களின் இருசக்கர வாகனத்தை, அங்கு திரண்ட சிலர் எட்டி உதைத்தனர். இதில் இருசக்கர வாகனம் தடுமாறி விழ, திருடர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து திருடர்களை அடித்து உதைத்த பொதுமக்கள், அவர்களை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (22) மற்றும் ராஜேஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. அத்துடன் இருவரும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அப்போது காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்த இருவரும், ‘ஃபேஸ்புக் பார்த்து தான் செல்போன் திருடுவது எப்படி என கத்துகிட்டோம். அதுல இருக்குற வீடியோல செல்போன் பறிப்பது எப்புடினு பார்த்து, அதேபோல பறிச்சோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ஊடகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.