தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு - வெவ்வேறு சம்பவம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு - வெவ்வேறு சம்பவம்

webteam

திண்டுக்கல்லில் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு இரண்டு வயதில் பிரசாந்த் என்ற மகன் இருந்தார். ராஜசேகர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அதே ஊரில் உள்ள தனது தம்பியான ராம்குமார் வீட்டிற்கு, தேவி மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். 

அப்போது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த பிரசாந்த் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து கிடப்பதை பார்த்த உறவினர்கள் உடனடியாக தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்த பிரசாந்தை மீட்டுள்ளனர். அத்துடன் குழந்தையை தூக்கிக் கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக குழந்தை பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் செல்வபாண்டியன் - ரம்யா. வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ரம்யா பணிபுரிந்து வருகிறார். செல்வபாண்டியன் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்தவர். தற்போது எச்ஐவி அலுவலகத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களுள் யுவந்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும் ஒருவர். இந்நிலையில் இன்று காலை ரம்யா-செல்வபாண்டியன் இருவரும் குழந்தை யுவந்திகாவை செல்வபாண்டியனின் அம்மா விஜயாவிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். 

விஜயா துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இருந்த 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கேனிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக அதற்குள் தலைகுப்புற தவறி விழுந்தது. துவைத்து முடித்த அவருடைய பாட்டி விஜயா, குழந்தை கேனிற்குள் விழுந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மயக்கநிலையில் இருந்துள்ளது. 

இதையடுத்து அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். குழந்தை தண்ணீர் கேனில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.