தமிழ்நாடு

கன்னியாகுமரியில் வேட்டைத் துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது

webteam

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வனப்பகுதியில் வேட்டை துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பியோடியவரை தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் யானை, சிங்கவால் குரங்கு, கடமான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் தேக்கு, ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வரும் கும்பல்கள் குமரி வனப்பகுதிக்குள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடி செல்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று வனச்சரகர் சிவகுமார் தலைமையில் ஊழியர்கள் கீரிப்பாறை அருகே வீரப்புலி பகுதியில் நடத்திய சோதனையின் போது வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த குமார், மணிகண்டன் மற்றும் மாத்துக்குட்டி காணி ஆகியோர் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதாக சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை கண்காணிக்க தொடங்கினர். வன ஊழியர்களை கண்டதும் தப்ப முயன்றபோது குமார், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பி ஓடிய மாத்துக்குட்டி காணி என்பவரை தேடி வருகின்றனர்.