தமிழ்நாடு

கோவை: இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்த இருவர் மீது பாய்ந்த என்எஸ்ஏ சட்டம்

webteam

கோவையில் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக பதற்றமான சூழல் நிலவியது. கோவை மாவட்ட பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கார்கள் சேதப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி இந்து அமைப்புகளின் உப அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகள் மீது எரிபொருள் குண்டுகள் வீசப்பட்டன.

இது தொடர்பாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கோவை மாநகர காவல் துறையினர் நகல்களை மத்திய சிறைக்கு அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி குனியமுத்தூரில் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினரான தியாகு என்பவரின் காரை, தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேசுராஜ் மற்றும் ஒப்பணக்கார விதி பகுதியில் உள்ள துணிக்கடையில் எரிபொருள் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா ஆகியோர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகர் பகுதிகளில் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்த சட்டம் பாயுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.