money theft
money theft file image
தமிழ்நாடு

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கைவரிசை.. பைக் லாக்கரில் பணம் வைக்கிறீர்களா? உஷார்!!

யுவபுருஷ்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, டீ மற்றும் உணவுகளை இவர் சப்ளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தேரடி வீதியில் உள்ள கனரா வங்கிக்கு சென்று, ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டி வண்டியின் சீட்டுக்கு கீழ் வைத்து பூட்டியுள்ளார். இதையடுத்து தன்னுடைய நண்பர்களை சந்திக்க வட்டாட்சியர் அலுவலகம் சென்ற அவர், வண்டியை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.  

பின்னர் வண்டியை எடுக்க வந்த போது பின் சீட்டின் லாக்கர் உடைந்து கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து சீட்டை தூக்கி பார்க்கும் போது அதில் வைத்திருந்த 2 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணம் மொத்தமாக கொள்ளை போனதை கண்டு அதிர்ந்துள்ளார். இதையடுத்து ஶ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார் அருள்பிரகாஷ். 

அந்தப் புகாரை தொடர்ந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்தைக் கொள்ளையடித்த நபர் யாரும் கண்ணில் தென்படவில்லை. பின்னர் அந்த பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே லாக்கரை உடைத்து அதிலிருந்த 2 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், பைக்கை விட்டு தூரமாக செல்லும்போது லாக்கரில் பணம் வைப்பதை தவிர்ப்பது நல்லது.