தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - வெளிநாட்டு இளைஞர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - வெளிநாட்டு இளைஞர் கைது

webteam

கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றுவந்த ருவாண்டா நாட்டு வாலிபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை  சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சரணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவேடம்பட்யிலிருது சரவணம்பட்டிக்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் போலீசார் சோதனை நடத்துவது அறிந்து அங்கிருந்த பேக்கரி முன் நின்றனர். 

இதனைப் பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பில்போர்ட் கைரன்கோ மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜேஸ் கிருஷ்ணன் என்பதும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பில்போர்ட் கைரன்கோ கடந்த 2012-2015 வரை கோவையில் உள்ள கல்லூரியில் படிப்பதற்கு வந்துள்ளார் என்பதும் படிப்பு முடிந்தவுடன் விசா முடிந்தும் தனது சொந்த நாட்டுக்கு திரும்பாமல் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.