சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக சிசிடிவி காட்சிகளை வைத்து, வாகன எண்ணை கண்டறிந்து பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை, செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பூபதி ராஜா(25), பிரசாந்த்(25) ஆகிய இருவரை வேளச்சேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 80 சவரன் தங்க நகைகள், லேப்டாப், இருசக்கர வாகனம், வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பூபதி ராஜா மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருந்துள்ளது. அதற்காக சிறை தண்டனையும் அனுபவித்து விட்டு 2017-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். வெளியில் வந்த உடன் பிரசாந்த் என்பவரை சேர்த்துக் கொண்டு விடுதிகளில் தங்கி வேளச்சேரி, சைதாப்பேட்டை, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் நோட்டமிட்டு, பகல் நேரத்தில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை சிந்தாரிப்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று பணம் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க 5 லிருந்து, 7 நிமிடங்கள் போதும். அதற்குள் வேலையை முடித்து விடுவோம் என கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் மீது 15 வழக்குகள் பதிவுசெய்த வேளச்சேரி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.