வங்கிக் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் பவுசியா பேகம், பிரவீன்குமார், சந்துரு. இவர்கள் 3 பேரும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுவை அளித்தனர். அதில் சாலிகிராமத்தைச் சேர்ந்த மீனா மற்றும் பாரிமுனை கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் தங்களிடம் வங்கி லோன் வாங்கிக் கூறி ஆவணங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு தெரியாமலே டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை தங்களுடைய பெயரில் வங்கிக் கடனில் வாங்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மீனா மற்றும் சங்கரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் வேறு யாரிடமாவது அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.