தமிழகத்தில் தொங்குசட்டமன்ற சூழலில், தவெக தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆளுநர் அழைப்பு தாமதம் செய்கிறார். இதே நேரத்தில், 1994 எஸ்.ஆர். பொம்மை வழக்கில் 9 நீதிபதிகள் கூறிய தீர்ப்பு மீண்டும் கவனத்தில் வருகிறது. மாநில அரசை கலைக்க முழு அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை; சட்டமன்றமே பெரும்பான்மையை சோதிக்கும் ஒரே மேடை என அந்த வரலாற்றுத் தீர்ப்பு வலியுறுத்தியது.
தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொங்குசட்டமன்றத்தின் விளைவாக யார் யாருடன் கூட்டணி அமைக்கபோகிறார்கள் என்ற பரபரப்பு அதிகமாக இருந்துவருகிறது. கூடவே, 108 என்ற தனிபெரும் வெற்றியை தவெக பெற்றுள்ள நிலையிலும் ஆட்சியமைக்க தவெக தலைமைக்கு தற்போது வரை ஆளுநர் அழைப்புவிடாமல் இருப்பதும் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகை செய்துள்ளது.
தனிபெரும்பான்மையை விஜய் நிரூபிக்கவேண்டும் என்று ஆளுநர் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகும் அதே சூழலில் தனிபெரும்பான்மையை நிரூபிக்கவேண்டியது சட்டமன்றத்தில் மட்டுமே தவிர ஆளுநரிடமில்லை என்ற எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை முன்னிலைப்படுத்தி விவாதங்களும் எழுப்பப்படுகிறது.
1989 ஏப்ரல் 21ம் தேதி அன்று கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றதாக கூறி, கர்நாடக ஆளுநர் பி.வெங்கடசுப்பையாவின் ஆலோசனையின் பேரில் பொம்மையின் அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், ஆதரவை திரும்ப பெறவில்லை என்றும் எங்கள் ஆதரவு எஸ் ஆர் பொம்மையின் ஆட்சிக்கு உள்ளதென 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தும் குடியரசு தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. இதனை சட்டரீதியாக கையாண்ட எஸ். ஆர் .பொம்மை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து, எஸ்.ஆர். பொம்மை உச்சநீதி மன்றத்தை அணுகினார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரித்து 11 மார்ச் 1994 அன்று தீர்ப்பை வழங்கியது.
வரலாறு எதிர்பாராத இந்த தீர்ப்பில், ஒரு மாநில அரசை அரசியல் சாசனப்பிரிவு 356ன் படி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சி நிறுவது என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்ட செயல் என்றும், எதாவது ஒரு மாநில அரசு 356ன் படி தவறான காரணங்களுக்கு கலைக்கப்பட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டு அதனை செல்லாது என அறிவிக்கும் உரிமையும் உண்டு எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், ஒரு மாநில அரசைக் கலைக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் முழுமையானது அல்ல என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் தனது ஆட்சியை அமல்படுத்தி வெளியிடும் பிரகடனம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, அவர் கலைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக, அரசின் பெரும்பான்மையை சோதிக்க வேண்டிய ஒரே களம் சட்டமன்றமே தவிர, மத்திய அரசின் முகவர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் ஆளுநரின் அகநிலை கருத்து அல்ல என்றும் அந்தத் தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறியது.
இந்த வரலாற்றுமிக்க தீர்ப்பே, தொங்கு சட்டமன்றங்கள் வேறேதேனும் மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் போதும், அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடும்போதும் அதிகம் மேற்கோள் காட்டப்படும் வழக்குகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் மாறியது. மேலும், 356-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கலைக்கப்படுவதற்கு ஒரு வகையில் முற்றுப்புள்ளியும் வைத்தது. அதற்கு முக்கிய காரணம், இந்த வழக்கு விசாரணைக்கு வரத் தொடங்கிய சமயத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகாலயா போன்ற பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களும் சட்டப்பிரிவு 356-இன் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் அனைத்துமே எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டததுதான். இந்த வழக்குகளில் சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்துவது நியாயமானது என்று கருதியதால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசாங்கங்களின் பதவி நீக்கங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த அதே வேளையில், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மத்திய அரசின் நடவடிக்கைகளை அது செல்லாததாக்கியது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு இணங்காத மாநில அரசுகளை கவிழ்க்கவும் கலைக்கவும் தனிபெரும்பான்மை இல்லையென்று காரணிகளை பயன்படுத்தி ஆளுநர்கள் மூலம் நிறைவேற்றப்படும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த 1994ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட எஸ் ஆர் பொம்மை தொடர்ந்த வழக்கை தற்போது மேற்கொள்காட்டி அரசியல் நிபுணர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.