தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் Pt web
தமிழ்நாடு

கொள்கை மாறி கூட்டணி வைக்கும் கட்சிகள்.. முன்னுதாரணமான 1967 தேர்தல்.. நடந்தது என்ன?

தமிழகத்தில் எதிர் அணியில் இருக்கும், எதிர் எதிர் கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் கூட தேர்தல்களின் போது இணைந்து போட்டியிடும் காட்சிகள் இப்போது வழக்கமாகி விட்டன. இதற்கு உதாரணமாக காட்டப்படும் 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

இந்தி திணிப்பு, மத்திய ஆட்சியின் மேலாதிக்க மனப்பான்மை ஆகியவற்றுக்கு எதிராக அண்ணா தீவிரம் காட்டி வந்த 1950களின் மத்தியில் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது ராஜாஜி அதிருப்தியில் இருந்தார். 1958ஆம் ஆண்டு மே மாதம் ராஜாஜி எழுதிய சுதந்திரமான சிந்தனை தேவை என்ற தலைப்பிலான கட்டுரையில் நாட்டில் சுதந்திரமான எண்ணம் கொண்ட எதிர்க்கட்சி தேவை என்று வலியுறுத்தி இருந்தார். பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எதிர்க்கட்சியாக அது இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு ஒரு ஆண்டு கழித்து 1959ஆம் ஆண்டு சுதந்திரா கட்சியை ராஜாஜி தொடங்கினார். எதிர்க்கட்சி என்ற புள்ளியில்தான் அண்ணாவும், ராஜாஜியும் கைகோத்தனர்.

அண்ணாதுரை, ராஜாஜி

1962ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா, ராஜாஜி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய அண்ணா, ராஜ கோபாலாச்சாரியாரும், நானும் சேர்ந்திருப்பதை கூடா நட்பு என்று சொல்கிறார்கள். உண்மையில் இது தேடாமலே அமைந்த நட்பு என்று கூறினார். காங்கிரசை வீழ்த்தும் பணியில் இருவேறு சாலைகளில் பயணித்த தாங்கள் இப்போது ஒரே இடத்தில் சந்தித்திருப்பதாக குறிப்பிட்டார். எனினும் இரண்டு கட்சிகளும் 1962 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனிதனியே களம் இறங்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியும் என்று 1962ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவின் தரவுகள் சுட்டிக்காட்டின.

அந்த தேர்தலில் காங்கிரஸ் 46.14 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக 27.10 சதவீத வாக்குகளைப் பெற்று 50 இடங்களையும், சுதந்திரா கட்சி 7.82 சதவீத வாக்குகளைப் பெற்று 6 இடங்களையும் பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி 7.72 சதவீத வாக்குகளையும், பிற உதிரி கட்சிகள் கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தன. எதிர்க்கட்சிகளாக தனித்தனிப்பாதையில் பயணித்த இருவரும் சேலம் நகராட்சி தலைமை பொறியாளராக இருந்த ஏ.வி.ராமன் மகன் வி.பி.ராமனின் சென்னை வீட்டில் சந்தித்தனர். ஏ.வி.ராமன் மறைவை அடுத்து வி.பி.ராமன் வீட்டுக்கு இருவரும் துக்கம் விசாரிக்க சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது.

அறிஞர் அண்ணா

1966ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவின் நான்கு நாள் மாநாட்டிலும் ராஜாஜி பங்கேற்றார். 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி, ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சியின் தமிழரசு கழகம் ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைந்தன. காங்கிரஸ் கட்சியால் பொருந்தா கூட்டணி என்று விமர்சிக்கப்பட்ட திமுக தலைமையிலான ஐக்கிய முன்னணி 179 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியில் இன்னொரு சிக்கலும் இருந்தது. ராஜாஜி சுதந்திரா கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தீரா பகை இருந்தது. ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில் இருதரப்பையும் அண்ணா அரவணைத்து வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார்.