Organ Donation  Chat GPT
தமிழ்நாடு

தமிழகத்தில் முதன்முறை.. 19 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்.. இறந்தும் வாழும் ’கர்ணன்'!

பிஞ்சுக் குழந்தையைப் பறிகொடுத்த சோகத்திலும், பிற குழந்தைகளின் புன்னகையில் தன் குழந்தையைக் காணப் பெற்றோர்கள் எடுத்த இந்த உன்னத முடிவு அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

19 மாதங்களே (1.5 வயது) ஆன கர்ணன் என்ற ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு , மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளன. தமிழக மருத்துவத்துறை வரலாற்றில் இவ்வளவு பிஞ்சு வயதில் ஒரு குழந்தையின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

organ donation

மூளைத் தண்டுவட நீர் தேங்கும் 'ஹைட்ரோசெபாலஸ்' (Hydrocephalus – மூளைத் தண்டுவட நீர் தேங்கும் பாதிப்பு)என்ற பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ணன் என்ற ஆண் குழந்தைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டது. பின்பு, அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது. 

சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. குழந்தை பிரிந்த இந்த மீளாத் துயரிலும், பிற உயிர்களைக் காக்க தன் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, அக்குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் வெற்றிகரமாக எடுக்கப்பட்டன. இதன்மூலம் தீவிர நோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 குழந்தைகளுக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது. பிஞ்சுக் குழந்தையைப் பறிகொடுத்த சோகத்திலும், பிற குழந்தைகளின் புன்னகையில் தன் குழந்தையைக் காணப் பெற்றோர்கள் எடுத்த இந்த உன்னத முடிவு அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.