Tirunelveli brain dead - youngest organ donor rasya X - Page
தமிழ்நாடு

திருநெல்வேலி | கார் விபத்தில் நேர்ந்த சோகம்... 18 வயது இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

திருநெல்வேலி கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 18 வயதே ஆன இளம் பெண் ரிஷியாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Vaijayanthi S

சுரேஷ் என்பவர் தனது 2 மகள்கள், மனைவியுடன் காரில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த சுரேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷும் அவரது மகள்கள் ரிஷியா மற்றும் பிரவீனாவும் பலத்த காயமடைந்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி, 18 வயதே ஆன ரிஷியா மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவர் திருநெல்வேலியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி வருணா (46). இவர்களுக்கு பிரவீனா, ரிஷியா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் தங்களது காரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுள்ளனர்.

Tirunelveli car accident brain dead - youngest organ donor rasya

அப்போது இவர்களது கார் கேடிசி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு ஊழியரான மலர் என்ற பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுரேஷின் மனைவி வருணாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுரேஷ், ரிஷியா மற்றும் பிரவீனா, பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Road Accident -Tirunelveli

ரிஷியாவின் உடல்நிலை மிகவும் மோசமான நேரத்தில், அவரை மட்டும் விபத்து நடந்த அன்றே (24.08.2025 அன்று) தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் ரிஷியாவின் உடல் நிலை மேலும் மோசமானதால், மீண்டும் அவரை ஆகஸ்ட் 30ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு ரிஷியாவிற்கு மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

One of the youngest organ donor Rasya

பின்பு குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து ரிஷியாவின் உடலுறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை தானமாக அளிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (31.08.2025) அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவரது உடல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அன்று மாலை 05.00 மணிக்கு இறுதி மரியாதையுடன் அவரது உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ரிஷியாவிற்கு வயது 18தான் ஆகிறது. அவர், தூத்துக்குடியில் உள்ள கல்லூரில் B.Com பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலங்களில் கார் போன்ற வாகனங்களை எடுப்பதற்கு முன்பு அதனை முழுமையாக முதல் நாளே பரிசோதனைச் செய்துவிட்டு எடுப்பது நல்லது.