தமிழ்நாடு

கூலித் தொழிலாளி வீட்டின் பீரோவை உடைத்து 18 பவுன் நகை ரூ.4.30 லட்சம் கொள்ளை

webteam

கறம்பக்குடி அருகே கூலித் தொழிலாளி வீட்டின் பீரோவை உடைத்து 18 பவுன் நகை ரூ.4.30 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்மானிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பையா - உமாராணி தம்பதியர் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கருப்பையா, கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி காதணி விழா வைத்து அதில் வந்த மொய் பணம் மற்றும் நகைகளை தனது வீட்டு பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கருப்பையா மற்றும் அவரது மனைவி உமாராணி ஆகியோர் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் சாவியை வெளியோரத்தில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கருப்பையா வீட்டின் பூட்டை திறந்து உள்ள இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.4.30 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்கு திரும்பிய கருப்பையா, கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில்,இது குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி மற்றும் கறம்பக்குடி போலீசார் வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர். கூலித் தொழிலாளி வீட்டில் பீரோவை உடைத்து 18 பவுன் நகை மற்றும் ரூ.4.30 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது