டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரும் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரில், தமிழ்செல்வனை தவிர 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கடந்த வாரம் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற கோடைக்கால அமர்வில் 2-வது வழக்காக விசாரணைக்கு வர உள்ளது. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம் எல் ஏக்கள் தகுதிநீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்கவுள்ள நிலையில் தவறான காரணங்களுக்காக விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.