கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீனவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம், கடியப்பட்டினம், புதூர், முள்ளூர்துறை பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீனவர்களை காணவில்லை. நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்குச் சென்ற 56 மீனவர்களில், 38 பேரை கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அவர்களில் 18 பேரை தொடர்ந்து கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர். கடலோர காவல்படை வீரர்கள் 2 மீட்பு படகுகள் மூலம் மீனவர்களை தேடி வருகின்றனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி தாலுகாவிற்குட்பட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மூக்கையூர், நரிப்பையூர், கீழமுந்தல், மேலமுந்தல் மற்றும் மாரியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், கீழமுந்தல் கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் கடல் சீற்றத்தால் சேதமடைந்தன.