தமிழ்நாடு

18 நாட்களே ஆன குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்..! விசாரணையில் வெளிவந்தது உண்மை..!

18 நாட்களே ஆன குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்..! விசாரணையில் வெளிவந்தது உண்மை..!

webteam

காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு பால் ஊட்டிய போது மூச்சு திணறி குழந்தை இறந்து போனதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செலஸ்டின். இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த செலஸ்டினுக்கு, சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு செலஸ்டின் குழந்தைக்கு பாலூட்டினார். பின்னர் குழந்தையை தூங்க வைத்தார். அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கூறியுள்ளார். சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின்மண்டை உடைபட்டு இறந்துள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் குழந்தையின் தாய் செலஸ்டினாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது செலஸ்டினா கணவர் சத்யராஜுடன் கட்டிட வேலைக்கு சென்றிருந்தபோது வேளச்சேரியில் அவருக்கு ஏற்கெனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அவருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.

“கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான் இந்த குழந்தையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதை விட குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன். இதனால் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை காலை பிடித்து தரையில் ஓங்கி அடித்தேன். அது அலறி துடித்து மயங்கி இறந்தது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினேன். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின் தலையில் காயம் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக வந்ததை அடுத்து போலீசார் என்னிடம் விசாரித்தபோது குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டேன்” இவ்வாறு செலஸ்டின் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற குழந்தையை அடித்து கொலை செய்த தாய் செலஸ்டினாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.