தமிழ்நாடு

குழப்பம் தீர்ந்தது..! தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் !

குழப்பம் தீர்ந்தது..! தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் !

Rasus

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

17-வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து இருந்தார். 3 தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடைபெறாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியில் குழப்பம் நீடித்தது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிக்குட்பட்ட மக்களவை தொகுதியில், எந்த தேதியில் மக்களவை தேர்தல் நடக்கிறதோ, அன்றுதான் காலியாக உள்ள பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே காலியாக உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என புரிய வந்தது.

இதனிடையே தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிப்பிலேயே குழப்பம் நீடிப்பதால், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதி இடைத்தேர்தல் என்று நடைபெறும் என்பதில் வாக்காளர்கள் மட்டுமில்லாமல் அனைவரிடத்திலும் குழப்பம் நீடித்தது.

இதனிடையே இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழக பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் தேதியில் அச்சுப் பிழை நிலவுவதாக தெரிவித்தார். அது சரிசெய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதியே நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.