பழமையான சிற்பங்கள்
பழமையான சிற்பங்கள் NGMPC22 - 168
தமிழ்நாடு

ராஜபாளையம்: வறண்ட கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டு நடுகற்கள், சதிக்கல் சிற்பங்கள்!

PT WEB

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள கண்மாயில் இருந்து பழமையான நடுகல் மற்றும் சதிக்கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையத்தில் உள்ள மடத்துப்பட்டியில், கொண்டனேரி கண்மாயின் உள்ளே பழமையான சிற்பங்கள் உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த வினித் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் தனியார் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர் கந்தசாமி நேரில் சென்று பார்த்த போது, இரண்டு நடுகற்கள் மற்றும் ஒரு சதிக்கல் சிற்பங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்புவரை இந்த சிலைகளை மக்கள் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த வழிபாடு மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இவை கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் வீரன் இறந்தவுடன், மனைவியும் சேர்ந்து உடன்கட்டை ஏறும் நிகழ்வை நினைவு படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சதிக்கல்லும் காணப்படுகிறது.

முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோவில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாட கோபுர அமைப்பு போன்று வடிவமைக்கப்பட்டு, கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரையில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது.

மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் வறண்டுள்ளதால் சிலைகள் வெளியே தெரிகின்றன.