செய்தியாளர்: பிரசன்னா
உசிலம்பட்டியில் 17 வயது பட்டியலின சிறுவனை ஆறு வயது மாற்று சமூக சிறுவனின் காலில் விழ வைத்த கொடூரம்... ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு! என்ன நடந்தது? எங்கே நடந்தது? பார்க்கலாம்...
தமிழக காவல்துறையில் ADGP சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு நிலவும் மாவட்டங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 445 கிராமங்களில் மதுரை மாவட்டமே முதலிடத்தில் உள்ளது.
இந்த அவலத்தை மீண்டுமொரு முறை நிரூபிக்கும் வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சங்கம் பட்டி கிராமத்தில் 17 வயது பட்டியலின வகுப்பை சேர்ந்த சிறுவனை மாற்று சமூகத்தை சார்ந்த ஆறு நபர்கள் கடத்திச் சென்று, செல்போனை பிடுங்கி அடித்து சித்திரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழ வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் ஆறு வயது சிறுவன் ஒருவனின் காலிலும் விழ வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த 17 வயது சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அச்சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ், நித்தீஸ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை உசிலம்பட்டி நகர காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பைச் சேர்ந்த சாமுவேல் ராஜ், “சட்டப்படி அனைவரும் சமம் என்று இருந்தாலும் கூட அனைவரின் மனதிலும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த தவறி இருக்கிறோம். படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவருக்கும் சாதி என்ற ஏற்ற தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டம் கடுமையாக இருந்தாலும் யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறை, நீதித்துறை மெத்தனப்போக்காக செயல்படுவதால் இது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுபவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.