தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

webteam

புதுக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் அருகே முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஐயப்பன் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் நிலத்தில் இருந்த வாகை மரத்தை தோண்டும் போது சிலை இருப்பது தெரியவந்தது. பொக்லைன் மூலம் குழிகள் தோண்டப்பட்டு சிலைகள் தேடும் பணி நடைபெற்றது. 

தகவல் அறிந்த வட்டாட்சியர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, விநாயகர், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், சிலைகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவைகளாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.