தமிழ்நாடு

``மாண்டஸ் புயல் பாதிப்பை தடுக்க இதலாம் செஞ்சிருக்கோம்” -சென்னை காவல் ஆணையர் பேட்டி!

webteam

மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக பிரத்தியேகமாக 12 மீட்பு குழுவினரோடு, 4 படகு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாண்டஸ் புயல் இன்று கரையை கடப்பதை ஒட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான காவல் குழுவினரையும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், “மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக மொத்தம் 12 குழுவினர் தயாராக இருக்கிறார்கள். அந்தக் குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சென்னையில் 16,000 போலீசார், 1500 ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரும் தேவையான மீட்புபணியில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள். அதே போன்று வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட நான்கு படகு குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். மற்றும் குழுவினர்களுக்கு சாலையில் மரம் விழுதல் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் “தற்பொழுது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மழை நீர் தேங்கும் இடங்கள், சாலையில் மரம் விழும் இடங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 மீட்புக் குழுவில் ஒரு குழுவுக்கு 10 பேர் என்ற அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக, 120 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று படகு குழுவில் ஒரு குழுவிற்கு ஐந்து பேர் பணியில் ஈடுபட உள்ளார்கள். சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது புயல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் 112, 1913 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்.



மேலும் பேசிய அவர், “புயல் நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என்பதால் பொதுமக்கள் அவசர தேவை இன்றி வெளியில் வர வேண்டாம். அதோடு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பழைய கட்டிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்றும் கூறினார்.