திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 158 வீடுகள் இடிந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்து வருகின்றன. இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு படி 158 வீடுகள் இடிந்து உள்ளதாக தெரிகிறது.
இந்த 158 வீடுகளில் 49 கூரை வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டன. 80 கூரை வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. மீதமுள்ள 29 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மழை தொடர்ந்தால் மேலும் வீடுகள் சேதம் அடையும் அபாயம் உள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 850 ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி வயல்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மழையால் பாதிப்பு அடைந்த வீடுகளிலுள்ள மக்களை சிறப்பு முகாம்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.